நியூசிலாந்து நாட்டின் மேற்கு கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
நியூசிலாந்தின் முக்கிய நகரமான கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் மத்திய தெற்கு தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 11 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை என்று நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தைச் சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணர்ந்துள்ளனர்.
மேலும், இதுவரை இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்றும், தொடர்ந்து சேதம் குறித்த ஆய்வுகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்புகள் அடிக்கடி நடைபெறும் பசிபிக் கடலைச் சுற்றியுள்ள ரிங் ஆஃப் பையர் என அழைக்கப்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு இதே பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.