”சமூக கலாசாரம் மற்றும் ஆன்மிக வளர்ச்சி தான் பாரதத்தின் முன்னேற்றம்,” என, தமிழக ஆளுநர் ஆர் .என் ரவி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் சங்கரமடத்தின் பீடாதிபதியாக, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்று, 50 ஆண்டு நிறைவு விழாவையொட்டி, ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை வளாகத்தில், 2004-ஆம் ஆண்டு, 50 அடி உயர ஸ்துாபி நிறுவப்பட்டது. தற்போது, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 89வது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்படும் நிலையில், இந்த ஸ்துாபி சமீபத்தில் சீரமைக்கப்பட்டது.
இந்த ஸ்துாபியை திறந்து வைத்து, தமிழக ஆளுநர் ஆர் .என் .ரவி கூறுகையில்,
“இந்த மாபெரும் தேசமான பாரதத்தை கட்டி எழுப்பியதில், ஆதி சங்கராச்சாரியாரின் பங்கு மகத்தானது. சனாதனம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளக்கி, பாரதத்தின் புராதன மகிமை பொருந்திய ஒரு தேசமாக விளங்கி வருகிறது.
பாரதத்தின் வேர்கள் மிகவும் ஆழமானவை. ‘வசுவதை குடும்பம்’ அதாவது, உலகம் அனைத்தும் ஒரே குடும்பம் என்ற பரந்த கருத்து நம்மை வழி நடத்துகிறது.
கொரோனா தொற்று பரவிய காலத்தில், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை, 125 நாடுகளுக்கு இலவசமாக வினியோகித்தோம்.
பல்வேறு பிரச்னைகள், மோதல்கள், போர்கள் நடக்கும் இந்த உலகில், மீண்டும் விஸ்வ குருவாகி உலகிற்கு ஒளிகாட்ட, இதுவே நமக்கு சிறந்த வாய்ப்பு. சமூக கலாசாரம் மற்றும் ஆன்மிக முன்னேற்றம், பாரதத்தின் மொத்த வளர்ச்சியை நோக்கமாக உடையது”. என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர் .என் .ரவியின் மனைவி லட்சுமி, பல்கலை துணை வேந்தர் ராகவன், நிர்வாக மேலாண்மை குழு உறுப்பினர் ஹிந்து ரவி மற்றும் பேராசிரியர்கள், மாணவ – மாணவியர் பங்கேற்றனர்.