கனடா நாட்டினருக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக, அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அறிவித்திருக்கிறது.
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நஜர், கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவத்தில் இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் குற்றம்சாட்டியதோடு, இருவரது புகைப்படத்தையும் வெளியிட்டனர். இந்த சூழலில், கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் தீவிரவாதத் தலைவன் ஹரிதீப் சிங் நஜர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். மேலும், அந்நாட்டுக்கான இந்தியத் தூதரையும் வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து, இதற்கு பதிலடியாக கனடா நாட்டின் இந்திய உயர் தூதரக அதிகாரியை வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால், உலக நாடுகள் பலவும் கவலை தெரிவித்தன. இதனிடையே, கனடா நாட்டினர் இந்தியப் பயணத்தை தவிர்க்கும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கு பதிலடியாக, கனடாவில் இருக்கும் இந்தியர்களும், மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறும் மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில்தான், கனடா நாட்டுக்காரர்களுக்கு விசா வழங்கவதை இந்திய தூதரகம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது. இதுகுறித்து பி.எல்.எஸ். இன்டர்நேஷனல் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “செயல்பாட்டுக் காரணங்களால் 2023 செப்டம்பர் 21-ம் தேதி முதல் கனடா நாட்டினருக்கு இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும்வரை தற்காலிக நிறுத்தி வைக்கப்படுகின்றன. மேலும், புதுப்பிப்புகளுக்கு பி.எல்.எஸ். இணையதளத்தை பார்க்கவும்” என்று தெரிவித்திருக்கிறது.