தேசிய விலங்கு எனப் போற்றப்படும் புலிகள், தமிழகத்தில் ஒரே மாதத்தில் 9 புலிகள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சில் வேல் பாய்ச்சியுள்ளது.
இந்த நிலையில், ஊட்டி அருகே உள்ள சின்ன குன்னூர் பகுதியில் ஒரு பெண் புலிக்குட்டி உயிரிழந்துள்ளது. அடுத்து, சீகூர் வனச்சரக எல்லையில் மேலும் 2 புலிக்குட்டிகள் உயிரிழந்தது தெரியவரவே, அதன் உடல்களை வனத்துறையினர் மீட்டனர்.
அதில், ஒரு பெண் புலிக்குட்டி உயிருடன் இருப்பதைக் கண்டு பிடித்தனர். அந்த குட்டியை மீட்ட முதுமலை கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்த 3 குட்டிகளும் பிறந்து 2 மாதங்களே ஆனவை என்பதால், வன ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படியாக, நீலகிரியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 புலிக்குட்டிகள் உள்பட 9 புலிகள் இறந்துள்ளது.
இயற்கையான மரணம், மின்சாரம் தாக்கி உயிரிழத்தல், விஷம் வைத்துக் கொல்லப்படுதல் போன்றவற்றால் புலிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது எனக் காரணத்தை அடுக்காமல், ஒரு புலி கூட பலியாகவில்லை எனக் கம்பீரமாக வனத்துறை மார்தட்டுவது எப்போது எனக் கேள்வி எழுப்பும் விலங்குகள் நல ஆர்வலர்கள்,
ஒரே மாதத்தில் 9 புலிகள் இறப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும், வனத்துறை வனவாசம் போய்விட்டது என்றும் காட்டமான விமர்சனம் கிளம்பியுள்ளது.