தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய, நீர்மட்டம் 38.19 அடியாக உள்ளது.
குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, பாசனத் தேவைக்கு ஏற்ப அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இன்று மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,367 கன அடியிலிருந்து 4,421 கன அடியாகக் அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 38.57 அடியிலிருந்து இன்று காலை 38.19 அடியாகக் குறைந்துள்ளது. மேலும், அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.17 டி.எம்.சி ஆக உள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 4,421 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், தொடர்ந்து அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.