சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தங்கம் கடத்தி வரப்படுகிறது.
குறிப்பாகச் சென்னை, திருச்சி விமான நிலையங்களுக்குத் தங்கம் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு தங்கம் கடத்தி வரும் நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து வருகின்றனர். தொடர் சோதனையில் பலர் சிக்கினாலும் கடத்தல் சம்பவங்கள் மட்டும் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில், துபாயிலிருந்து சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. இதில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த நபர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த நபரை மடக்கி சோதனை செய்தபோது, அவர் 3.50 கிலோ கடத்தல் தங்கம் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை விமான நிலையத்தில், விமான நிலையத்தில் ஒரே நாளில் 13 கிலோ தங்கம் சிக்கியதை அடுத்து, சுங்கத்துறையைச் சேர்ந்த 20 பேர் மற்றும் கார்கோ அஞ்சலக பிரிவில் பணியாற்றிய 23 பேர் என மொத்தம் 43 ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.