“இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசாக அளிக்கப்படும்” என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் பங்கேற்கும் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடக்கவுள்ளது.
ஒவ்வொரு அணியும் மற்ற அனைத்து அணிகளுடன் தலா ஒரு முறை விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும். அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் களம் காணும்.
இந்த உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையினை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.16.5 கோடியும், அரையிறுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்கும் அணிகளுக்கு தலா ரூ.6.63 கோடியும் பரிசாக அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.