19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்றுத் தொடங்கி அக்டோபர் 8-ஆம் தேதி வரை நடக்கிறது.
ஆனால் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சிலப் போட்டிகள் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவேத் தொடங்கிவிட்டது. இன்று தஜிகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ்ப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக ஹர்மீத் தேசாய், மனவ் தக்கர், மனுஸ் ஷா ஆகியோர் பங்குபெற்றனர்.
இந்தப் போட்டி தொடங்கிய 17 நிமிடங்களிலேயே முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் மானவ், தஜிகிஸ்தான் வீரர் அப்சல் மஹ்முதோவை 11-8 , 11-5 , 11-8 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணியை முன்னிலைப் படுத்தினார்.
இரண்டாவது ஆட்டத்தில் இந்திய வீரர் மனுஷ் ஷா 13-11, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் தஜிகிஸ்தான் வீரர் உபேதுல்லோ சுல்டோனோவை வீழ்த்தினார்.
மூன்றாவது ஆட்டத்தில் இந்திய வீரர் ஹர்மீத் 11-1, 11-3, 11-5 என்ற செட் கணக்கில் இப்ரோகிம் இஸ்மொயில்சோடாவை வீழ்த்தினார்.
இதனால் இந்திய அணி 3-0 என்ற செட் கணக்கில் தஜிகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.