உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்த வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ரோகித் சர்மாவுக்கு ரெய்னா அறிவுரை வழங்கியிருக்கிறார்.
உலகக் கோப்பை போட்டியில் அனைத்து அணியிலுமே 8 முதல் 9 வீரர்கள் வரை பேட்டிங் தெரிந்தவர்களை வைத்திருக்கிறார்கள். இந்த வகையில் இந்திய அணி, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா உடன் சேர்த்து மொத்தம் ஏழு பேர் பேட்டிங் செய்யும் வகையில் அணியைத் தேர்வு செய்திருக்கிறது.
இதனால் கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறார். இதற்கு இந்திய அணியின் தேர்வாக சர்துல் தாக்கூர் தேர்வுச் செய்யப்பட்டு இருக்கிறார். சர்துல் தாக்கூர் பந்துவீச்சில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் முக்கியக் கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுகிறார்.
இந்த ஆண்டில், ஒருநாள் கிரிக்கெட்டில் அவர், ஒரு முறை கூட 20 ரன்களை தாண்டவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் ரெய்னா, “இந்திய அணியில் தற்போது மூன்று தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக பாராட்டினார்.”
மேலும் அவர், ” என்னைக் கேட்டால் பும்ரா, முகமது சிராஜ் , முஹமது ஷமி ஆகிய மூன்று வேக பந்துவீச்சாளர்களை மட்டுமே இந்திய அணி பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். நான்காவது வீரராக ஹர்திக் பாண்டியா இருக்கிறார், இந்த வேகப்பந்துவீச்சு படை இந்தியாவுக்கு விக்கெட்டுகளை பெற்றுத் தரும்” என்று உறுதியாக கூறினார்.
உலகக் கோப்பையை வென்று தரவேண்டும் என்றால் அது பந்துவீச்சாளர்கள் கையில் தான் இருக்கிறது என்று சுட்டிக் காட்டிய ரெய்னா, “இந்த மூன்று வீரர்களும் அந்தப் பணியை சிறப்பாக செய்வார்கள் என்று தெரிவித்தார். ஷர்துல் தாக்கூரை விட முகமது சமியும் பேட்டிங்கில் பெரிய சாட் ஆடக்கூடிய வீரர் தான் என்றும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியா விளையாடினால் அதற்கு ஏற்றார் போல் மாற்றங்களை செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.