2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதியில், வங்கதேச அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு பதக்கம் உறுதி ஆகி உள்ளது.
நடந்து முடிந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இலங்கை அணியை 50 ரன்களுக்கு சுருட்டி இருந்தது. அதே போன்ற ஒரு செயலை செய்துப் போட்டியில் வெற்றிப் பெற்று உள்ளது இந்திய மகளிர் அணி.
இந்தப் போட்டியில் முதல் ஓவரில் பந்துவீசிய பூஜா 2 விக்கெட்களை எடுத்தார். அடுத்து விக்கெட்கள் விழாமல் வங்கதேச அணி 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 வது ஓவரில் பூஜா மீண்டும் ஒரு விக்கெட்டை எடுத்தார். அதன் பின் அடுத்தடுத்து விக்கெட்கள் விழ வங்காளதேச அணி 18 வது ஓவரில் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக சுல்தானா 12 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக பூஜா 4 விக்கெட்களும் சாது, அமன்ஜோத் கவுர், ராஜேஸ்வரி, தேவிகா ஆகியோர் தலா 1 விக்கெட்களும் எடுத்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா களமிறங்கினார்கள். 4 வது ஓவரில் ஸ்மிருதி மந்தனா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 7 வது ஓவரில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரீகஸ் 20 ரன்களும் , கனிகா அஹுஜா 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக இந்தியா 8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துப் போட்டியை வென்றது.
இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.