விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர். சென்னையில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. கடைசி நாளான இன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட உள்ளன.
சென்னையில் இன்று பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு உள்ளிட்ட 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. இதற்காகச் சென்னையில் 17 வழித்தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட 17 வழித்தடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விநாயகர் சிலை ஊர்வலங்கள் கண்காணிக்கப்படுகிறது. சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களில் நடமாடும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
சென்னையில் மட்டும் சுமார் 1,500 சிலைகளும், ஆவடி, தாம்பரத்திலிருந்து சுமார் 500 சிலைகள் என 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிலைகள் கடலில் கரைப்பட உள்ளன. காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் சிலைகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடலில் சிலைகளைக் கரைப்பதற்காக ட்ராலி, கிரேன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியக் கடலோர காவல் படை, தமிழக கடலோர பாதுகாப்புப் படை, தமிழ்நாடு தீயணைப்புத் துறை, சென்னை மாநகராட்சி, தமிழகக் காவல்துறை மற்றும் நீச்சல் வீரர்கள், தன்னார்வலர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, சென்னை, ஆவடி, தாம்பரத்தில் பாதுகாப்புக்காக 22 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.