ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்திய அணி உஸ்பெகிஸ்தானை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றப் பெற்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு ஹாக்கிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் இடம் பெறவில்லை. இருப்பினும் மற்ற வீரர்கள் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக விளையாடி வந்தனர்.
இந்திய அணியின் லலித் மற்றும் வருண் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடிக்க முதல் பகுதியில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.இதன் பிறகு அபிஷேக் மற்றும் மந்திப் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் கோல் அடிக்க இந்திய அணியின் ஸ்கோர் 4-0 என்ற கணக்கில் உயர்ந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பகுதி முடிவதற்குள் லலித் மற்றும் சுகஜித் கோல் அடித்தனர்.
இந்திய அணியில் மந்தீப் சிங் ஹாட்ரிக் கோல் அடிக்க ஆட்டத்தின் முதல் 30 நிமிடத்தில் இந்திய அணி
7-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதனை அடுத்து ஆட்டத்தின் மூன்றாவது பகுதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வருண் கோலாக, மாற்ற பின் சுகுஜித் மற்றும் ரோகி தாஸ் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடிக்க இந்திய அணி 10-0 என முன்னிலை வகித்தது.
இதேபோன்று வருண் தனது மூன்று மற்றும் நான்காவது கோலை அடிக்க இந்தியாவின் ஸ்கோர் 14 – 0 என்ற கணக்கில் உயர்ந்தது. மீண்டும் லலித் மற்றும் சஞ்சய் கோல் அடிக்க ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 16 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அதிகபட்சமாக வருண் குமார் 4 கோல்களையும் லலித் குமார் மற்றும் மந்தீப் சிங் தலா மூன்று கோல்களையும் அடித்தார்கள்.
இந்த தொடரில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றால் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறலாம். இந்திய அணி ஆசியக் கோப்பையில் 1966 மற்றும் 1988 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மூன்று தங்க பதக்கத்தை வென்றிருக்கிறது. இந்தத் தொடரில் நான்காவது தங்கப் பதக்கத்தை இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.