தமிழ் மொழியை நான் முழுமையாகக் கற்று, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வதை வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ளேன் என மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆளுநா் மாளிகையில் எண்ணித் துணிக தொடரின் 10-வது நிகழ்வில், தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் மேதகு தமிழக ஆளுநர் ஆா்.என். ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, மேதகு தமிழக ஆளுநர் ஆா்.என். ரவி பேசுகையில், ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்துவது மொழியே. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான திருக்குறளைப் புதிதாக உருவான நாகரிகத்துடன் தொடர்புப்படுத்தி பார்க்க முடிகிறது. அதனால்தான் தமிழ் மொழியை உலகமே போற்றுகிறது.
இந்திய மொழிகளிலேயே தமிழ் மொழிக்கு நிகராக எந்த மொழியும் இல்லை. தமிழ் இலக்கியங்களின் சிறப்பை, தமிழ் மொழியில் படித்தால்தான் ரசிக்கவும், ருசிக்கவும் முடியும். தமிழ் மொழி இலக்கியங்களை மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்கிறவர்கள், அதன் கருத்துகளை விரிவாக விளக்க வேண்டும். அப்போதுதான் அதன் சுவை மாறாமல் இருக்கும்.
தமிழ் மொழியை நான் முழுமையாகக் கற்று, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வதை வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ளேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் சார்பில் ஆளுநர் ஆா். என். ரவிக்கு ‘அறிவுக் களஞ்சியம்’ என்ற விருதை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளி நாயகம் வழங்கி கௌரவித்தார்.
மேலும், தமிழ் மொழி இலக்கியங்களை மொழி பெயர்ப்பு செய்த 42 பேருக்கு ‘திருமுறைத்திருமகன்’ விருது வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பரத நாட்டியம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.