அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவது உங்கள் கூட்டு இலக்காக உள்ளது என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் கூறினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள, 2021ம் ஆண்டுத் தொகுப்பைச் சேர்ந்த, 182 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தது.
அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,
அதிகாரம், பங்களிப்பு, பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உங்களின் சேவை, வேறு எந்த சேவையையும் விட வேறுபட்டது என்றார். இது ஒரு சேவை அல்ல, ஓர் இயக்கம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
நல்லாட்சி என்ற கட்டமைப்பின் கீழ் இந்தியாவையும் அதன் மக்களையும் முன்னோக்கிக் கொண்டு செல்வதே குறிக்கோள் என்று கூறினார். தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதே உங்களின் இலக்காகும் என்பதை அவர் பகிர்ந்து கொண்டார்.
அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவது உங்களின் கூட்டு இலக்காகும். பல்வேறு துறைகளில் தங்கள் திறனை உணர சக இளைஞர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்கள் ஒரு பெரிய பங்களிப்பை வழங்க முடியும்.
2047 ஆம் ஆண்டின் வளர்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் பங்களிக்க உங்களுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றல் மூலம் நமது நாட்டை மாற்றியமைப்பதில் பயனுள்ள முகவர்களாக மாற முடியும் என்று கூறினார்.
ஏழைகள், அடித்தட்டு மக்களுக்காக இதயம் துடிக்கும், இரக்கமுள்ள அரசு ஊழியர் என்பவர், வெறுமனே தொழில்முறை அதிகாரி என்பதிலிருந்து வேறுபட்ட உண்மையான அரசு ஊழியர் என்று கூறினார்.
சமூகத்தில் விளிம்புநிலை மக்களை உயர்த்துவது அரசு ஊழியர்களின் நம்பிக்கைப் பொருளாக இருக்க வேண்டும், ‘கோப்பிலிருந்து களம்’, ‘களத்திலிருந்து கோப்பு ‘ ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொள்ள முயற்சி மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
மக்களை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் உங்களைக் கோப்புகளுடன் மிகவும் அர்த்தமுள்ள முறையில் ஈடுபடச் செய்யும் என்று கூறினார்.