பாரதப் பிரதமர் மோடியின் ரோஜ்கார் மேளா திட்டத்தின் ஒரு பகுதியாகக் கோவையில் இன்று பயனாளிகளுக்குப் பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் வழங்கினார்.
நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி தொடங்கி வைத்தார்.
மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனிதவளம் தொடர்பாகப் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசு அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து, பல்வேறு துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் `ரோஜ்கார் மேளா’ திட்டம் மூலம் இன்று 51 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
அதன் ஒரு பகுதியாக, கோவை கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு மேளா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு, பயனாளிகளுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
இது போன்ற ஒரு நல்ல வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கும், பாரத பிரதமர் மோடிக்கும் பயனாளிகள் மனதார நன்றி தெரிவித்தனர்.