ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ‘பி’ பிரிவில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
சீனாவில் ஹாங்சோ நகரில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஸ்குவாஷ் ‘பி’ பிரிவில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இதில் இந்தியா அணியில் 15 வயதேயான அனாஹத் சிங், முத்த வீராங்கனைகளான ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தன்வி கண்ணா ஆகியோர் பங்குபெற்றனர்.
அனாஹத் சிங் தனது ஆசிய விளையாட்டு முதல் போட்டியிலேயே வெறும் 16 நிமிடங்களில் 11-6, 11-6, 11-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வீராங்கனை சாடியா குல்லை வீழ்த்தினார்.
ஜோஷ்னா சின்னப்பா தனது 6 வது ஆசிய விளையாட்டு போட்டியில் 13 நிமிடத்திலேயே 11-2, 11-5, 11-7 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வீராங்கனை நூர் உல் ஹுடா சாதிக்கை வீழ்த்தினார்.
அடுத்ததாக இந்திய வீராங்கனை தன்வி கண்ணா 11-3, 11-6, 11-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வீராங்கனை நூர் உல் ஐன் இஜாஸை வீழ்த்தினார்.
இதனால் ஆட்ட முடிவில் இந்திய மகளிர் அணி ஸ்குவாஷ் ‘பி’ பிரிவில் 3-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.