இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவை பார்க்க 1200 கிலோமீட்டர் பயணித்து வந்துள்ளார் சீன இரசிகர்.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 655 வீரர், வீராங்கனைகள் சென்றுள்ளனர். இந்த முறை முதன் முதலாக இந்திய கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது. மகளிர் அணி மற்றும் ஆண்கள் அணி என இரண்டு அணிகளும் பங்கேற்றன.
முதலில் மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்திய மகளிர் அணி ஸ்மிரிதி மந்தனா தலைமையில் பங்கேற்று ஆடியது. இறுதிப் போட்டியில் இலங்கை அணிகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது.
சீனாவில் கிரிக்கெட் விளையாட்டு பிரபலம் இல்லை என்பதால் அங்கு நடந்த டி20 போட்டிகளை காண பெரிய கூட்டம் வரவில்லை. நூறு பேருக்குள் தான் மக்கள் மைதானத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், சீன ரசிகர் ஒருவர் “மந்தனா ஒரு கடவுள்” என்று ஒரு அட்டையில் எழுதி அதனை ஏந்திக் கொண்டே போட்டியைக் கண்டு கொண்டிருந்தார். அதைக் கண்ட இந்திய ஊடகங்கள் ஆச்சரியத்தில் இருந்தனர்.
அவரது பெயர் வெய் ஜுன்யு ட்ரூ. 25 வயது இளைஞரான அவர் பீஜிங்கில் இருந்து 1270 கிலோமீட்டர் பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் ஹாங்சோ நகருக்கு வந்திருக்கிறார். மந்தனாவை பார்க்க மட்டுமே அவர் இவ்வளவு தூரம் வந்ததாக கூறினார்.
சீனாவில் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பே இல்லை என்ற நிலையில், எப்படி அவர் இந்திய அணி கேப்டனின் தீவிர ரசிகராக மாறினர் என்பது குறித்து கேட்டனர். அப்போது அவர் அளித்த பதிலில்,
2019இல் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே சூப்பர் ஓவர் நடைபெற்றது. அது உலகம் முழுவதும் வைரலான நிலையில், வெய் ஜுன்யு ட்ரூ வீடியோவை பார்த்துள்ளார்.
அதன் பின் தொடர்ந்து கிரிக்கெட் ஹைலைட் வீடியோக்களை பார்த்து இருக்கிறார். இரு ஆண்டுகள் முன்பு நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே ஆன மகளிர் கிரிக்கெட் தொடரை பார்த்து இருக்கிறார்.
அப்போது அதில் ஸ்மிரிதி மந்தனாவின் ஆட்டத்தை பார்த்து அவரின் ரசிகராக மாறி இருக்கிறார். தற்போது சீனாவில் மந்தனா விளையாடுகிறார் என்பதை அறிந்து ஒரு நாள் இரவு முழுவதும் பயணம் செய்து வந்து மந்தனாவை நேரில் கண்டு இரசித்துள்ளார்.