பாரத மக்களின் பெரும் நம்பிக்கையான ஆதார் அட்டையின் ‘பயோமெட்ரிக்’ தொழில் நுட்பத்துறையின் நம்பகத்தன்மை குறித்து மூடி நிறுவனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இதற்கு, மூடி நிறுவனம் ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், இது போன்ற ஆதாரமற்ற தகவல்களைப் பொதுமக்கள் புறம் தள்ள வேண்டும் என்றும், மின்னணு, தகவல், தொடர்பு அமைச்சகம் பதிலளித்துள்ளது.
ஆதார் குறித்து மூடி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களுடன் இணைக்கப்பட்ட முதன்மை அடையாள ஆவணமாக ஆதார் பயன்படுத்தப்படுகிறது. எனவே, தொழில்நுட்பம் நம்பகமானதாக இல்லாவிட்டால், மக்கள் தங்களுக்குத் தேவையான மானியங்களை அரசாங்கத்திடமிருந்து பெறமுடியாது.
அதாவது, 2023 ஜூலை 31, நிலவரப்படி, 765.30 மில்லியன் இந்தியர்கள் பொது விநியோக முறை மூலம் ரேஷனைப் பெற ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைத்துள்ளனர். 280 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் PAHAL மூலம் LPG மானியத்திற்கான சமையல் எரிவாயு இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்.
788 மில்லியனுக்கும் அதிகமான ஆதார் எண் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் 100 சதவீத விவசாயிகள் பயனாளிகள் ஆதார் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர்.
1.3 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு இது உண்மையான அடையாளமாக மாறியிருந்தாலும், ஆதாரின் தனியுரிமை மற்றும் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகங்கள் பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கடந்த ஆண்டு, சிஏஜி அறிக்கை ஒன்றில், தரவுப் பொருத்தம், அங்கீகரிப்பதில் பிழைகள், ஆதார் காப்பகத்தில் குறைபாடுகள் உள்ளன. மேலும், சில நேரங்களில் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களின் தரவு அவர்களின் ஆதார் எண்ணுடன் பொருந்தவில்லை என்றும் மூடி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு, பாரத மின்னணு, தகவல், தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் ஐடி திட்டம் ஆதார். இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் ஒருவரின் கைரேகைகள், முகம், கண் போன்றவற்றின் மின்னிலக்கப் படங்களுடன் இணைக்கப்பட்ட தனித்துவமான எண் இருக்கும்.
இதன் மூலம் பொது மற்றும் தனியார் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது.
மூடி நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பான தகவல்களுக்கு ஆதரவாக, எந்தவொரு தரவு அல்லது ஆய்வை அது முன்வைக்கவில்லை.
இந்த நிலையில், அதிக வெயில் அல்லது ஈரப்பதம் உள்ள சூழல்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப் பயன்படுத்தப்படும் ‘பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை குறித்து மூடி அறிக்கையில் கேள்வி எழுப்பயிருந்தது.
குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களின்கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது என்றும், அங்கு தொழிலாளர்களின் அடையாளங்களைச் சரிபார்க்க ‘பயோமெட்ரிக்’ தொழில்நுட்பம் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக அடையாளம், கருவிழி அடையாளம் போன்ற தொடர் அற்ற வழிகளில் ‘பயோமெட்ரிக்’ சமர்ப்பிப்பு சாத்தியமாகும் என்றும் மூடி நிறுவனம் இதைப் பற்றித் தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை என்றும் மின்னணு, தகவல், தொடர்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்பு, தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு தொடர்பான பாதிப்புகள் குறித்து அந்த அறிக்கையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இதுவரை ஆதார் தரவுத்தளத்தில் தகவல் ஊடுருவல் ஏதும் நிகழவில்லை. அது தொடர்பான புகார்கள் ஏதும் இல்லை என்று பாரத மின்னணு, தகவல், தொடர்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆதார் குறித்த சந்தேகங்கள் அனைத்திற்கும் ஏற்கனவே, தக்க ஆதாரங்களுடன் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வேண்டும் என்றே குறுகிய எண்ணத்தில், ஆதார் குறித்து தவறான தகவல் வெளியிட்டுள்ளனர். இதற்கு அவர்கள் தரப்பில் இருந்து ஒரு ஆதரமோ அல்லது அதற்கு ஆதரவாக ஒரு விசயத்தைக்கூட காட்டவில்லை. எனவே, ஆதார் குறித்த ஆதாரமற்ற தகவல்களை புறம்தள்ள வேண்டும் என்று மின்னணு, தகவல், தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.