மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர்களில் ஒருவனான பாகிஸ்தானிய கனேடிய தொழில் அதிபர் தஹாவூர் ராணா மீது மும்பை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2008 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 26, -ம் தேதி கடல் மார்க்கமாக இந்திய எல்லைக்குள் லஷ்கர் இ -தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் நுழைந்தனர்.
மீனவர்களைப் படுகொலை செய்துவிட்டு அவர்களின் படகில் மும்பைக்குள் ஊடுருவினர். அங்கிருந்து பல குழுக்களாகப் பிரிந்து, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஹோட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் என 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிகளால் சுட்டும், வெடி குண்டுகளை வீசியும் தீவிரவாத செயல்களை அரங்கேற்றினர். இதனால், அந்த இடமே போர்க்களமாகக் காட்சியளித்தன.
இதனையடுத்து தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தொடர்ந்து 2 நாட்கள் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த பயங்கர தாக்குதலில், இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 175 அப்பாவி பொது மக்கள் கொலை செய்யப்பட்டனர். 300 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மேலும், இந்தியத் தரப்பில், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஹேமந்த் கர்கரே, ராணுவ உயர் அதிகாரி சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.
முடிவில் தீவிரவாதிகள் 10 பேரில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிபட்டான். வழக்கு விசாரணைக்கு பின்னர், இறுதியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, 2012 நவம்பர் 21 -ம் தேதி அவனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தானிய கடியத் தொழில் அதிபர் தஹாவூர் ராணா மீது மும்பை குற்றப்பிரிவு காவல்துறை 405 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன் டேவிட் ஹெட்லி. அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, ராணாவுக்கு எதிராக வாக்குமூலமும் கொடுத்துள்ளான்.
அவனது வாக்குமூலத்தின்படி, ராணா, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் லஸ்கர் இ – தொய்பா அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்னர் ராணா மும்பையில் பிரபல ஹோட்டலில் சுமார் 10 நாட்கள் ரூம் போட்டுத் தங்கியதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது.
பத்திரிக்கையாளர் கொலை வழக்கு ஒன்றில் அமெரிக்கச் சிறையில் ராணா தற்போது உள்ளார்.
இந்த வருடம் மே மாதம் ராணாவை, இந்தியாவுக்கு நாடு கடத்த, அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால், ராணா தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என தேசபற்றாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.