கடந்த திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது. 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, கட்டுமானத்தில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. புகார் எதிரொலியாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விசாரணை நடத்தியது.
இதை எதிர்த்து, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மற்றும் இன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உள்ளிட்டார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கிற்கு தேவையான ஆதாரங்கள் மற்றும் முகாந்திரம் இருப்பின் வழக்கு தொடரலாம் என, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனையடுத்து, அரசின் உத்தரவை ஏற்று இந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.