இராமேஸ்வரத்தில் திடீரென கடல் 100 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை உள்வாங்கியதால், பக்தர்கள் அச்சமடைந்தனர்.
இராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இராமநாத சுவாமி திருக்கோவிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி இராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில், இன்று காலை பக்தர்கள் அக்னி தீர்த்த கடலுக்கு நீராட வந்தனர். அப்போது, திடீரென கடல் 100 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை உள்வாங்கியது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடல் உள்வாங்கியதால், அப்பகுதியிலிருந்த, பாறைகள் வெளியே தெரிந்தது. பக்தர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் சேறும் சகதியுமாக காணப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் கடல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. பின்னர், பக்தர்கள் புனித நீராடினர்.
இதேபோல் இராமேசுவரத்தில் உள்ள சங்குமால், ஓலைக்குடா உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் உள்வாங்கியது. இதனால் மீனவர்கள் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்த விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் தரை தட்டி நின்றன.
இந்த நிகழ்வு, அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், சுற்றலா பயணிகள் கடல் உள்வாங்கியதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில வருடங்களாகக் கடல் அடிக்கடி உள்வாங்கும் நிகழ்வு நடக்கிறது. அதிகாலையில் கடலில் நீரோட்டம் மாறுபடுவதால் இதுபோன்று நடக்கிறது. சில நிமிடங்களில் கடல் இயல்பு நிலைக்கு மாறிவிடும். இது வழக்கமான ஒன்றுதான் என்றனர்.