இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணங்களை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்கிற தனி நாடு கோரி, சீக்கியர்களில் ஒரு பிரிவினர் போராடி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று, அங்கிருந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கனடா நாட்டில்தான் அதிகமான காலிஸ்தான் தீவிரவாதிகள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு கனடா நாடும் குடியுரிமை கொடுத்திருக்கிறது.
இதுபோன்று வெளிநாடுகளில் இருந்து செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் இருக்கும் சீக்கியர்கள் பலரும் உதவி புரிந்து வருகின்றனர். மேலும், நிழலுலக தாதாக்கள் மூலம் ஆள் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களிலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஆகவே, காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடிம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த சூழலில், காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், இந்திய அரசால் தீவிரவாதியாக பிரகடனப்படுத்தப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய மதத் தலத்தின் முன்பு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கனடாவின் வின்னிபெக் நகரில் 2 கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுக்தூல் சிங் என்கிற மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டார். 2017-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் கனடாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் இவர், அந்நாட்டைச் சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதியான அர்ஷ்தீப் தல்லா என்பவரின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு வந்திருக்கிறார்.
இந்த அர்ஷ்தீப் தல்லாவுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சுஹைல் என்பவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், பஞ்சாப் மாநிலம் மொகா பகுதியைச் சேர்ந்த தல்லா, அம்மாநிலத்திலுள்ள ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து மதத் தலைவர்களை குறிவைத்து செயல்பட்ட விவகாரத்தில் தேடப்படும் நபர் என்பதை டெல்லி காவல்துறையினர் கண்டறிந்தனர். அதோடு, 25 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக தல்லா இருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிய என்.ஐ.ஏ. களத்தில் குதித்திருக்கிறது. இதன் முதற்கட்டமாக நாடு முழுவதும் 6 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், டெல்லி என்.சி.ஆர்., ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்களில் 51 இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது.