ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி துப்பாக்கி சுடுதல் பிரிவில் இரண்டு தங்கம் வென்றுள்ளது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. இதுவரை இந்தியா 3 தங்க பதக்கங்கள் மட்டுமே வென்றிருந்த நிலையில் இப்போது இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இன்று மகளிர் 25 மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் பங்குபெற்றனர்.
இதில் மனு பாக்கர் 590 புள்ளிகளைப் பெற்றுத் தகுதிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். ஈஷா சிங் 586 புள்ளிகளை பெற்று 5 வது இடத்தைப் பிடித்தார். ரிதம் சங்வான் 583 புள்ளிகளை பெற்று 7வது இடத்தைப் பிடித்தார்.இதன் மூலம் இந்திய அணி மொத்தமாக 1759 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. 1756 புள்ளிகளுடன் சீனா வெள்ளி பதக்கம் வென்றது. 1742 புள்ளிகளுடன் தென் கொரியா வெண்கலப் பதக்கம் வென்றது.
செப்டம்பர் 26 வரை 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை வென்று இருந்தது. இன்று இந்தியாவின் ஆரம்பமே தங்கத்துடன் தொடங்கியுள்ளது. மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி துப்பாக்கி சுடுதல் பிரிவில் இரண்டு தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.