அயோத்தி இராமர் கோவில் கட்டுமானப் பணி வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி 26-ம் தேதிக்கு முன்பு பக்தர்களின் தரிசனத்துக்காகத் திறக்கப்படும் என்று கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.
அயோத்தியில் ஸ்ரீ இராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இப்பணிகள் 2023-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அயோத்தி ஸ்ரீ இராமர் கோவில் கட்டுமானப் பணி வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதம் 26-ம் தேதிக்கு முன்பு பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்படும் என்று கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு நிருபேந்திர மிஸ்ரா அளித்த பேட்டியில், “இக்கோவில் 2 பகுதிகளாக கட்டி முடிக்கப்படவிருக்கிறது. முதல் பகுதியானது சுமார் 2.6 ஏக்கர் பரப்பளவில் கோவிலின் தரைத்தளம் அமைக்கப்படுகிறது. இத்தளத்தில் 5 மண்டபங்கள் கட்டப்படுகின்றன. இங்கு விரைவில் கருவறையில் குழந்தை ராமர் திருமேனி நிறுவப்படும்.
மேலும், தரைத் தளத்தில் 160 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் வெவ்வேறு வடிவங்களில் 25 ஐகானோகிராஃபிக்கல் வேலைகள் அமைக்கப்படுகின்றன. வால்மீகி ராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்ட கல்லில் செதுக்கப்பட்ட இராமர் கதையைக் கூறும் கீழ் பீடத்தின் பணி சுமார் 50 சதவீதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், கும்பாபிஷேக தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிரதமர் அலுவலகம் கொடுக்கும் தேதியைப் பொறுத்து கும்பாபிஷேக தேதி முடிவு செய்யப்படும். எனினும், 2024 ஜனவரி 26-ம் தேதிக்கு முன்பு, பக்தர்கள் இராமரை கண்டிப்பாக தரிசிக்க முடியும்” என்றார்.
அயோத்தி வழக்கில் 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, அயோத்தியில் பிரம்மாண்டமான இராமர் கோயில் கட்டுவது தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு மத்திய அரசு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை அமைத்தது. இந்த அறக்கட்டளையின் மேற்பார்வையில்தான் தற்போது கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.