தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தேர்வர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 621 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்குத் தேர்வு அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியானது. இதில், காவல் சார்நிலை பணிக்கு 511 காலி இடங்களும், சிறப்புக் காவல் சார்நிலை பணிக்கு 110 பணி இடங்களும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தேர்வுக்கு, ஜூன் 1 முதல், ஜூன் 30 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 26 மற்றும் 27-ம் தேதி நடைபெற்றது. முதன்மைத் எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெற்றது.
தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்தடுத்த எண்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், தேர்வு அறைகளில் அதிகளவு முறைகேடுகள் நடந்திருக்க கூடும் எனத் தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கெனவே தி.மலையில் தேர்வு எழுத செல்போன் மூலம் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து அனுப்பிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.