பிரபல இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அரிய கையெழுத்துப் பிரதி, ரூபாய்10.7 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
அறிவியலில் முக்கிய இடம் வகிக்கும் சிறப்புச் சார்பியல் கொள்கையை 1905-ஆம் ஆண்டும், பொது சார்பியல் கொள்கையை 1915-ஆம் ஆண்டும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளியிட்டார்.
சிறப்பு சார்பியல் கொள்கை மற்றும் பொது சார்பியல் கொள்கை குறித்து ஜெர்மன் மொழியில் விளக்கமளித்து அவர் எழுதிய கட்டுரைகள், கடந்த 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில், சிறப்பு இணைப்பில் வெளியானது.
இந்நிலையில், இன்று சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள வால்டோர்ஃப் அஸ்டோரியாவில், கிறிஸ்டி ஏலம் நிறுவனம் சார்பில், ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதி ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இது, ஐன்ஸ்டீனின் அரிய கையெழுத்துப் பிரதி என்பதால், மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மொத்தம் 14 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரதியில், சார்பியல் கோட்பாடு கண்டுப்பிடிக்கப்பட்டதற்கான வரலாறு குறித்தும், கொள்கையின் பயன்பாடு குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கொள்கைகளுடன் தொடர்புடைய இரண்டு சமன்பாடுகள், காலம், இடம் தொடா்பு குறித்து விளக்கும் ஒரு வரைபடம், அறிவியல் சூத்திரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
கடந்த 2021-ஆம் ஆண்டு , கிறிஸ்டி ஏல நிறுவனம் சார்பில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ஏலம் விடப்பட்டது. இது ரூபாய் 96.77 கோடிக்கு (13 மில்லியன் டாலர்க்கு) ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.