சென்னையில் தனியாருக்குச் சொந்தமான செல்போன் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் இன்றும் 2-வது நாளாகச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமானவரி மோசடி தொடர்பாகச் சென்னையில் உள்ள தனியார் செல்போன் நிறுவனமான லெனோவா நிறுவனம் உள்ளிட்ட 10 இடத்தில் வருமானவரித்துறையினர் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, லேப்டாப், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் லெனோவா நிறுவனம் மற்றும் அதன் சில துணை நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும், ஹரியானாவில் உள்ள குருகிராம் மற்றும் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள லெனோவா நிறுவனத்தின் வளாகங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 6 மணிக்கு வாகனத்தில் வந்த அதிகாரிகள், 10 பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.
இந்த நிலையில், இன்றும் 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், சோதனை நடைபெறும் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், சோதனை நடைபெறும் பகுதிகளில் தூப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.