ஆசிய விளையாட்டு போட்டி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா தங்க பதக்கம் வென்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து 655 வீரர்கள் பல்வேறுப் போட்டிகளில் பங்குப் பெற்றுள்ளனர்.
இதுவரை இந்தியா மொத்தம் 22 பதக்கங்களை வென்றிருந்தது. போட்டியில் நான்காம் நாளான இன்று இந்திய அணி ஒரு தங்கம் வென்று தங்க பதக்கத்துடன் தொடங்கியுள்ளது.
இன்று காலையில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா அணியின் சார்பாக சரப்ஜோத் சிங், ஷிவா நர்வால் மற்றும் அர்ஜுன் சிங் சீமா ஆகியோர் பங்குபெற்றனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் சரப்ஜோத் 580 புள்ளிகள் பெற்று 5 வது இடத்தை பிடித்தார். அர்ஜுன் 578 புள்ளிகளை பெற்று 8 வது இடத்தை பிடித்தார். ஷிவா நர்வால் 576 வது இடத்தை பிடித்து 14 வது இடத்தை பிடித்தார். மொத்தமாக இந்திய அணி 1734 புள்ளிகளை பெற்று முதல் இடம் பிடித்து தங்கம் வென்றது.
சீனா அணி 1 புள்ளி வித்தியாசத்தில் தங்க பதக்கத்தை தவறவிட்டு வெள்ளி பதக்கம் வென்றது. வியட்நாம் 1730 புள்ளிகளை பெற்று வெண்கல பதக்கம் வென்றது. மேலும் இதில் 5 வது மற்றும் 8 வது இடத்தை பிடித்த சரப்ஜோத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் தனிநபர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதுவரை இந்தியா துப்பாக்கி சுடுதல் பிரிவில் மட்டும் நான்கு தங்கம், நான்கு வெள்ளி, 5 வெண்கலம் உட்பட மொத்தமாக 13 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.