ஆசிய விளையாட்டுப் போட்டி பெண்களுக்கான 60 கிலோ வுஷூ இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து 655 வீரர்கள் பல்வேறுப் போட்டிகளில் பங்குப் பெற்றுள்ளனர். இதுவரை இந்தியா 23 பதக்கங்களை வென்றிருந்த நிலையில் தற்போது இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
இன்றுப் பெண்களுக்கான 60 கிலோ வுஷூ போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக ரோஷிபினா தேவி பங்குபெற்றார். இந்தப் போட்டியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி சீன வீராங்கனையான வூ ஜியோவெய்யை எதிர்த்து விளையாடினார்.
இதன் முதல் சுற்றில் வூ ஜியோவெய் 1-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார். இரண்டாம் சுற்றில் துவக்கத்தில் ரோஷிபினா தேவி முன்னிலை வகித்தார். அதனால் அவர் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இறுதியில் வூ வெற்றி பெற்றார் என நடுவர்கள் அறிவித்தனர். இதனால் ரோஷிபினா தேவி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2018 ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ரோஷிபினா தேவி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது வெள்ளி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.