மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று நாசிக் மற்றும் தானே பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
கோதவரி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மழையின் காரணமாக, நாசிக் மற்றும் தானே பகுதிகளின் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு, அதிகாரிகள் நிவாரண முகாம்களில் தங்கவைத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தானே நகரில் உள்ள வாக்ளே எஸ்டேட் பகுதியில் நேற்று பெய்த கனமழை மற்றும் காற்றின் காரணமாக, பெரிய மரம் ஒன்று அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் மீது விழுந்தது. இதில் மரத்தின் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு டேங்கர் லாரி ஆகியவை சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் யாரும் இல்லாததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி பணியாளர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.
இதற்கிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம், மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.