திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானமாக ரூபாய் 2.93 கோடி கிடைத்துள்ளது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இவ்வாறு, கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனைப் பல்வேறு வகைகளில் செலுத்துகின்றனர். குறிப்பாக, தங்கம், பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றைக் காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையானது, மாதந்தோறும் எண்ணப்படுகிறது.
அதன்படி, கோவில் உண்டியலிலிருந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்புடன் கோயில் மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கோயில் ஊழியர்களின் உதவியுடன் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது. காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள், ஈடுட்டனர்.
இதில், கோவிலின் நிரந்தர உண்டியல் மூலம் 2 கோடியே 76 இலட்சத்து 88 ஆயிரத்து 763 ரூபாயும், ஆவணி திருவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட தற்காலிக உண்டியல் மூலம் 25 ஆயிரத்து 520 ரூபாயும், கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் 19 ஆயிரத்து 711 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியல் மூலம் 1 இலட்சத்து 13 ஆயிரத்து 89 ரூபாயும், கோவில் அன்னதானம் மூலம் 15 இலட்சத்து 8 ஆயிரத்து 214 ரூபாயும், மேல கோவில் உண்டியல் மூலம் 15 ஆயிரத்து 113 ரூபாயும், நாசரேத் கோவில் மூலம் 1,315 ரூபாயும், கிருஷ்ணாபுரம் கோவில் மூலம் 7ஆயிரத்து 432 ரூபாயும் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 93 இலட்சத்து 80 ஆயிரத்து 32 கிடைத்தது.
இதுதவிர தங்கச் சங்கிலி, மோதிரம், சிறிய வேல் உள்ளிட்ட 2,100 கிராம் மதிப்பிலான தங்கப்பொருட்களும், 19 கிலோ 35 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களும், 423 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன.