கேபிள் தொலைக்காட்சி விதிகள், 1994 இல் முக்கிய திருத்தங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகள், 1994 ஐ திருத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் மல்டி சிஸ்டம் ஆபரேட்டர் (எம்.எஸ்.ஓ) பதிவுகளை புதுப்பிப்பதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், கேபிள் ஆபரேட்டர்கள் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களுடன்டி உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
எம்.எஸ்.ஓ பதிவுக்கான திருத்தப்பட்ட விதிகளின் முக்கிய அம்சங்கள்,
எம்.எஸ்.ஓக்கள் பதிவுக்கும், பதிவை புதுப்பிக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக ஒளிபரப்பு சேவா போர்ட்டலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எம்.எஸ்.ஓ பதிவுகள் பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும். செயலாக்கக் கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் ஆகும்.
பதிவை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் பதிவு, காலாவதியாவதற்கு ஏழு முதல் இரண்டு மாதங்களுக்குள் இருக்க வேண்டும்.
இந்த புதுப்பித்தல் செயல்முறை வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது, ஏனெனில் இது கேபிள் ஆபரேட்டர்களுக்கு தங்கள் சேவைகளை தடையின்றி தொடர உறுதியை வழங்கும்.
7 மாதங்களுக்குள் பதிவு காலாவதியாகும் எம்.எஸ்.ஓக்கள் பிராட்காஸ்ட் சேவா போர்ட்டல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
ஏதேனும் உதவி தேவைப்பட்டால், போர்ட்டலில் உள்ள ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம், ஒரு மின்னஞ்சல் sodas-moiab[at]gov[dot]in க்கு அனுப்பலாம்.
கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் விதிகள், 1994 இன் கீழ் புதிய எம்.எஸ்.ஓ பதிவுகள் மட்டுமே வழங்கப்பட்டன. எம்.எஸ்.ஓ பதிவுகளுக்கான செல்லுபடியாகும் காலத்தை விதிகள் குறிப்பிடவில்லை, ஆன்லைன் விண்ணப்பங்களை கட்டாயமாக தாக்கல் செய்வதையும் அங்கீகரிக்கவில்லை.
கேபிள் ஆபரேட்டர்கள் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களுடன் உள்கட்டமைப்பைப் பகிர்வது தொடர்பான ஒரு விதியைச் சேர்ப்பது மேம்பட்ட இணைய ஊடுருவல் மற்றும் வளங்களின் திறமையான பயன்பாடு ஆகிய இரட்டை நன்மைகளை வழங்கும். இது பிராட்பேண்ட் சேவைகளுக்கான கூடுதல் உள்கட்டமைப்பின் தேவையையும் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.