375 ஆண்டுகள் தண்ணீருக்குள் மறைந்திருந்த உலகின் 8-வது கண்டத்தைப் புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
உலகில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மற்றும் அண்டார்டிக் என 7 கண்டங்கள் மட்டுமே உள்ளன. மேலும், 8-வதாக ஒரு கண்டம் இருப்பதாக பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.
உலகில் 8-வது கண்டமாக இருந்த ஒன்று, இவ்வளவு நாட்கள் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத வகையில் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடல் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தைக் கண்டு பிடித்துள்ளனர். இந்த கண்டத்திற்கு விஞ்ஞானிகள் ஜிலாண்டியா என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த கண்டம் நியூசிலாந்துக்கு அருகே, 375 ஆண்டு காலமாக மறைந்திருந்ததாகவும், இது பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சுமார் 3,500 அடி ஆழத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்த புதிய கண்டத்தின் 94 சதவீதப் பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. இதில், நியூசிலாந்தைப் போல சில தீவுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த கண்டம் ஒட்டுமொத்தமாக 49 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக அமைந்துள்ளது.
ஏற்கனவே, பசிபிக் பெருங்கடலில் பல மர்மங்கள் உள்ளன. இப்போது அதில் ஒரு கண்டமே ஒளிந்திருப்பதாக கூறுகின்றனர். ஜிலாண்டியா கண்டத்தைப் பற்றி இன்னும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக புவியியலாளர்கள் கூறுகின்றனர். ஜிலாண்டியா பற்றி தீர்க்கப்பட வேண்டிய மற்றொரு மர்மம் என்னவென்றால், அது எப்போது நீருக்கடியில் சென்றது? என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.