சென்னையில், புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் அதே சாலைகளால், அந்த பகுதியில் பொது மக்கள் குடியிருக்கும் வீடுகளை சத்தமின்றி, குழிக்குள் தள்ளும் வேலை நடைபெற்று வருவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக. அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், குண்டும் குழியுமான சாலை பிரச்சனை ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் புதிய சாலைகளை அதிக உயரத்தில் அமைத்து மக்களின் வீடுகளைக் குழிக்குள் தள்ளும் அவலமும் நடந்து வருகிறது. எந்த பகுதி மக்களின் வசதிக்காகச் சாலை அமைக்கிறார்களோ அந்த பகுதி மக்கள் உழைத்துச் சம்பாதித்துக் கட்டிய வீடுகளை அதே சாலைகளை வைத்து செல்லாக்காசு ஆக்கிவிடுகிறார்கள்.
சாலைன்னா உயரத்தானே செய்யும், உங்கள் வீட்டை நீங்க தான் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைத்து விட்டார்கள். ஆனால் சாலை உயரம் எதற்கு அதிகரிக்க வேண்டும் என்ற கேள்விக்கு அரசாங்கத்திடம் பதிலே கிடையாது. பழைய சாலையை அகற்றி அதே உயரத்திற்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் விதியை அரசாங்கமே மதிப்பது கிடையாது.
குறிப்பாக இந்த சாலை ஆய்வுப் பணிகள் தொடங்கிய இந்த 3 நாட்களில் சென்னையின் புறநகரான மேடவாக்கம் பகுதியிலிருந்து ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த பகுதியில் MLA அரவிந்த் ரமேஷ் அவர்கள் சாலை ஆய்வுப் பணிகளுக்குச் செல்வாரா? முதல்வர் மட்டும் தான் சாலை ஆய்வு செய்யலாமா என்ன? MLA ஆய்வு செய்தால் கட்சியிலிருந்து நீக்கியா விடுவார்கள்? ஒரு மக்கள் பிரதிநிதி மக்கள் பிரச்சனைகளை மக்கள் சார்பாகப் பேச வேண்டுமே தவிர மக்களுக்குப் பிரச்சனையாக இருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.