உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பு நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியின் இந்திய அணி 66 இரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இருப்பினும் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரை இந்திய அணி எவ்வாறு கையாள போகிறது என்பது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே உடன் பேசினார்.
இதுக் குறித்து அவர், ” இந்திய அணியின் தற்போதைய சூழல் குறித்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னுடையப் பேட்டிங்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்துப் போட்டி முழுவதும் விளையாட ஆசைப்படுகிறேன். இந்த போட்டியில் பௌண்டரிகளும் சிக்சர்களும் அடித்ததில் திருப்தி கொள்கிறேன். கடந்த ஏழு, எட்டு போட்டிகளாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம்” என்று கூறினார்.
மேலும் அவர், ” எங்கள் அணி பல்வேறு சூழலில் பல அணிகளுக்கு எதிராக கடும் சவால்களை எதிர்க்கொண்டுள்ளது. அந்த சவால்களை நாங்கள் சிறப்பாகவே கையாண்டோம் என்று நினைக்கிறேன். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை இருப்பினும் பும்ரா பந்துவீச்சு குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி தான், அவர் பந்து வீசுவதில் எந்த குறையும் இல்லை. பும்ரா பந்து வீசும் போது ஏதேனும் உடலளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து தான் நாங்கள் கவலைப்பட்டோம். ஆனால் அப்படி எந்த சிக்கலும் இதுவரை இல்லை. பும்ரா மனதளவிலும் உடலளவிலும் எப்படி இருக்கிறார் என்பது தான் எங்களுக்கு முக்கியம் ” என்று கூறினார்.
மேலும் அவர் அணியை பற்றி பேசுகையில், ” உலகக்கோப்பை தொடரில் எந்த 15 வீரர்கள் களமிறங்க போகிறார்கள் என்பது குறித்து நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த ஒரு குழப்பமும் இல்லை. ஒரு அணியாக நாங்கள் எதை எதிர் கொள்ள போகிறோம் எந்த சவால்கள் காத்திருக்கிறது என்று அறிந்து வைத்திருக்கிறோம். கிரிக்கெட் என்பது தனிப்பட்ட விளையாட்டு கிடையாது. ஒரு அணியாக விளையாடுவது.
எனவே அணியில் உள்ள ஒவ்வொருமே வெற்றிக்காக தங்களுடைய பங்களிப்பை வெளிக்காட்டுவார்கள் என நான் நம்புகிறேன். அப்படி செய்தால் மட்டுமே உலகக்கோப்பை போன்ற தொடரை வெல்ல முடியும். இந்த தொடரில் நாங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் இடைவெளியில் உடல் அளவில் தயாராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், உடலளவிலும் மனதாகவிலும் தெளிவாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும். இதுதான் வரும் ஒன்றரை மாதத்தில் நாங்கள் கவனம் செலுத்தப் போகிறோம்” என்று கூறினார்.