ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடும் பிரிவில் இந்தியா 11 பதக்கங்களை வென்றுள்ளது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை வென்று வருகிறது.
இதில் இன்று 25 மீ பெண்கள் பிஸ்டலின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக துப்பாக்கி சுடும் வீராங்கனை இஷா சிங் மற்றும் மனு பாக்கர் பங்குபெற்றனர்.
இதில் இஷா சிங் 34 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். சீனாவின் ரூய் லியு 38 புள்ளிகளை பெற்று முதலிடமும், தென் கொரியா ஜியின் யாங் 29 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தார்.
இதன் மூலம் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றது. மேலும் இந்திய வீரர் மனு பாக்கர் 21 புள்ளிகளை பெற்று 5 ஆம் இடத்தை பிடித்தார். போட்டியின் போது மனு பாக்கரின் பிஸ்டல் செயலிழந்துவிட்டது. அதனால் அவரால் முதல் மூன்று இடங்களை பிடிக்க முடியவில்லை இருப்பினும் கடுமையாக போராடி 5 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
இதுவரை 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்தியா 11 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.