ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.
சீனாவின் ஹாங்ஷோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 45 நாடுகளைச் சேர்ந்த 12,000க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுவரையில் இந்தியா துப்பாக்கி சுடுதல், மகளிர் கிரிக்கெட், குதிரையேற்றம் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது.
இந்நிலையில் இன்று பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக 17 வயதான பாலக் குலியா மற்றும் 18 வயதான இஷா சிங் ஆகியோர் பங்குபெற்றனர்.
இதில் பாலக் குலியா 242.1 புள்ளிகளை பெற்று முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். இதில் தங்கம் வென்றது மட்டுமில்லாமல் ஆசிய விளையாட்டில் புதிய சாதனையும் படைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் சீனா அணியின் சாதனையை முறியடித்துள்ளார்.
இதன் மூலம், தற்போதுவரை ஹாங்சோவில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.