ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடந்த பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை வென்று வருகிறது.
இந்நிலையில் இன்று பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக 17 வயதான பாலக் குலியா மற்றும் 18 வயதான இஷா சிங் ஆகியோர் பங்குபெற்றனர்.
இதில் இந்திய அணியின் 18 வயதான இஷா சிங் 239.7 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். மேலும் இதற்கு முன்பு நடந்த 25 மீ பெண்கள் பிஸ்டலின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இஷா சிங் 34 புள்ளிகளை பெற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் ரைபிள் பிரிவில் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும், அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர்.
இதுவரை இஷா சிங் மொத்தமாக ஒரு தங்கம் இரண்டு வெள்ளி உட்பட 3 பதக்ககங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.