உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து.
2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பைத் தொடரின் பயிற்சிப் போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 போட்டிகள் நடைபெரும் வகையில் அட்டவணை உள்ளது. இதன் படி நேற்று வங்கதேசம் , இலங்கை, பாகிஸ்தான்- நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடின.
இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துப் போட்டி இரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் ஆசாம் பேட்டிங் தேர்வுச் செய்தார்.
பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஷபிக், இமாம் உல் ஹக் களமிறங்கினர். ஷபிக் 14 ரன்களுக்கும், இமாம் உல் ஹக் 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். பாபர் அசாம் 80 ரன்கள் குவித்தும், முகமது ரிஸ்வான் 103 ரன்கள் குவித்தும் சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினர்.
சவுது ஷகீல் அதிரடியாக 53 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார். ஆகா சல்மான் 33, ஷதாப் கான் 16 ரன்கள் சேர்க்க பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்தது.
அடுத்ததாக 346 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரவீந்திரா மற்றும் கான்வே களமிறங்கினர். இதில் கான்வே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க ரவீந்திரா அதிரடியாக விளையாடி 97 ரன்களை எடுத்தார். கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்து பின் மற்ற வீரர்கள் பேட்டிங் செய்யும் வகையில் ரிட்டையர்ட் ஹர்ட் என்ற முறையில் வெளியேறினார்.டேரில் மிட்செல் 59 ரன்கள் குவித்து அவரும் அடுத்த வீரர்களுக்கு வழி விட்டு சென்றார்.
இறுதியில் மார்க் சாப்மேன் நின்று ஆடி 41 பந்துகளில் 65 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்கள் ஹாரிஸ் ரௌப் 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்தும், ஹசன் அலி 7.4 ஓவர்களில் 66 ரன்கள் கொடுத்தும், முகமது வாசிம் 7 ஓவர்களில் 58 ரன்கள் கொடுத்தும் ஏமாற்றம் அளித்தனர்.
நியூசிலாந்து அணி 44 வது ஒவேரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.