கருத்து சுதந்திரம் குறித்து எங்களுக்கு யாரும் பாடம் நடத்தத் தேவையில்லை. கருத்து சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டும் வகையில் நீடிக்கக் கூடாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர், கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சீக்கிய குருத்துவாரா முன்பு கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால், இந்தியா-கனாடா இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வாஷிங்டன் டி.சி.யில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் இங்கு (அமெரிக்காவில்) கூறுகிறேன், மேலும் கனடியர்களுக்கும் இதைக் கூறிக்கொள்கிறேன். நாம் ஒரு ஜனநாயக நாடு. பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஆனால், இதை மக்களுக்குச் சொல்லலாம். பேச்சுச் சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டுவதாக நாங்கள் நினைக்கவில்லை. இது எங்களுக்கு சுதந்திரத்தைப் பாதுகாப்பது அல்ல, சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும். கனடா எப்போதும் கருத்துச் சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம் மற்றும் அமைதியான எதிர்ப்பு சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். அது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
அதேசமயம், வன்முறையைத் தடுக்கவும், அதற்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை பின்னுக்குத் தள்ளவும் நாங்கள் எப்போதும் இருக்கிறோம். இந்தியாவின் நிலையில் மற்ற நாடுகள் இருந்தால், அவர்களின் இராஜதந்திரிகள், தூதரகங்கள் மற்றும் குடிமக்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டால் எப்படி நடந்துகொள்வார்கள்?
கனடியர்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இது இந்திய அரசின் கொள்கையல்ல என்பதையும், அவர்கள் எங்களுடன் குறிப்பிட்ட மற்றும் பொருத்தமான எதையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருந்தால், நாங்களும் அதைப் பார்க்கத் தயாராக இருக்கிறோம் என்பதையும் நாங்கள் அவர்களுக்குச் சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே, அந்த அர்த்தத்தில், விஷயம் அத்துடன் நிற்கிறது”என்று கூறியிருக்கிறார்.