திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 -வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டார் என்பது திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு. இதனைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, தற்போது, சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதனிடையே, சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தாக்கல் செய்த 3 குற்றப்பத்திரிகைகளிலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில், நிர்வாக இயக்குநர், பொறியாளர்கள் உள்ளிட்ட 45 மீது ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 120 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியுள்ளனர்.
செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.