பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கனமழை காரணமாக, பயிர் நாசமடைந்தது. விவசாயம் அடியோடு அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால், விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கினர். அரசு கைகொடுக்கும் என நம்பினர். ஆனால், அரசு எதுவும் செய்யவில்லை.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்றும், இன்றும் இரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டதால், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால், பல இரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. மேலும்,சில இரயில்கள் அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் துயர் துடைப்போம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி, ஆட்சி அமைத்த உடன் விவசாயிகளை மறந்துவிட்டது எனக் குற்றம் சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.