மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் 700 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று பெய்த தொடர் கனமழையால், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,906 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று அணையின் நீர்மட்டம் 70.05 அடியிலிருந்து 73.75 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி அதிகரித்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணை பகுதியில் மழை பெய்து வருவதால், தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதேபோல், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 82 அடியாக இருந்த நிலையில், மேலும் 5 அடி உயர்ந்து, 87.20 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதேபோல், 52.50 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 19 அடியாக உள்ளது. அணை பகுதியில் நேற்று 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், 22 அடி உயரம் கொண்ட நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.50 அடியாக உள்ளது.