ஆசிய போட்டிகளின் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய ஆடவர் அணி 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
சீனாவின் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் போட்டிப் போட்டுக் கொண்டுப் பதக்கங்களை வென்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆடவர் ஸ்குவாஷ் போட்டி நடைப்பெற்றது. இதில் இந்திய அணி சார்பாக மஹீஷ், சவுரவ் கோஷல், அபய் சிங் ஆகியோர் பங்குப் பெற்றனர்.
ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்க்கொண்டது. இதன் முதல் போட்டியில் மஹீஷ் மற்றும் பாகிஸ்தான் அணியின் இக்பால் மோதினர். இதில் பாகிஸ்தான் வீரர் இக்பால் 5-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வந்தார் இதனால் பாகிஸ்தான் 8-11, 11-3, 11-2 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றது.
இரண்டாவதுப் போட்டியில் சவுரவ் கோஷல் பாகிஸ்தான் வீரர் முஹம்மது அசிம்மை எதிர்த்துப் போட்டிப் போட்டார். இதில் ஆரம்பத்தில் இருந்தே அசத்தலாக விளையாடிக் கொண்டுவந்த சவுரவ் கோஷல் 11-5, 11-1, 11-3 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றுப் போட்டியை டையாக மாற்றினார்.
இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளைப் பெற்றிருக்க மூன்றாவதுப் புள்ளியைப் பெற்றுத் தங்கத்தை வெல்ல போவது யார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது.
இந்நிலையில் மூன்றாவது ஆட்டத்தில் அபய் சிங் பாகிஸ்தான் வீரர் நூர் ஜமானுவை எதிர்த்து போட்டியிட்டார். இதில் இருவருக்கும் போட்டிக் கடுமையாக சென்றுக் கொண்டிருக்க இறுதியில் நூர் ஜமானுவை விட அபய் சிங் 4 புள்ளிகள் முன்னிலைப் பெற்று இந்தியாவிற்கு தங்கம் வென்றுக் கொடுத்தார்.
இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி 10வது தங்கத்தை வென்று அசத்தியுள்ளது. இதுவரை மொத்தமாக இந்திய வீரர்கள் 10 தங்கம், 13 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளனர். இந்தியா மொத்தமாக 36 பதக்கங்கள் வென்றுப் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.