நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தென்காசியைச் சேர்ந்த 59 பேர் தனியார் பேருந்து மூலம் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சுற்றுலா சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேபி, கலா, முருகேசன், கௌசல்யா உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து, காயமடைந்தவர்களைப் போராடி மீட்டனர். ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
விபத்து நடந்த நேரம் இரவு என்பதால், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்தது. பொது மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்தும், டார்ச் லைட் மூலம் வெளிச்சம் ஏற்படுத்தியும் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றினர்.
இதனிடையே, மீட்புப் பணிகளுக்கு உதவி எண்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி, 1077 மற்றும் 94437 63207 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.