இரயில்களுக்குக் கூடுதல் நிறுத்தம், சேவை அதிகரிப்பு, வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட விபரங்களுடன், புதிய கால அட்டவணையை நேற்று தெற்கு இரயில்வே வெளியிட்டது.
தெற்கு இரயில்வேயின் புதிய அட்டவணை நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இன்று முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து, தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயணிகளின் பாதுகாப்பான பயணம் மற்றும் விரைவு பயணத்திற்கு தெற்கு இரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதேபோல, தண்டவாள சீரமைப்பு மற்றும் இரயில்வே கட்டமைப்புகள் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் இன்று முதல் 34 எக்ஸ்பிரஸ் இரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.
அதன்படி, கோவை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 12244), விழுப்புரம் திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 16854), சென்ட்ரல் நாகர்கோவில் (12689), தாதர் நெல்லை (வண்டி எண் – 11021), பாலக்காடு திருச்செந்தூர் (வண்டி எண் – 16731), மதுரை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 16344), கோவை மதுரை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 16721), ஈரோடு நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 16845), குருவாயூர் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 16341), கொல்லம் எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் -16824), சென்ட்ரல் திருப்பதி எக்ஸ்பிரஸ் (16053) உள்ளிட்ட 34 இரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், 5 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக, 60 நிமிடங்கள் வரை, பயண நேரம் குறையும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.