காஞ்சிபுரத்தில் வசித்து வரும் மூதாட்டி ஒருவருக்கு வங்கியிலிருந்து ரூ.17 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு, பின்னர், அந்தப் பணத்துடன், மூதாட்டியின் சேமிப்பு பணத்தையும் வங்கி நிர்வாகம் எடுத்துக் கொண்டதால், மூதாட்டி சோகத்தில் மூழ்கினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பரமசிவன் தெருவில் வசித்து வருபவர் பண்டித விஜயலட்சுமி (வயது 55). இவர் கடந்த 2001 -ம் ஆண்டு முதல் இந்தியன் வங்கியில் வரவு – செலவு கணக்கு வைத்துள்ளார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் முதியோர் ஓய்வூதியமும், இதே வங்கிக் கணக்கு வழியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதமாக முதியோர் ஓய்வூதியம் பண்டித விஜயலட்சுமிக்கு வராமல் இருந்துள்ளது. இதனால், இந்தியன் வங்கிக்குச் சென்று தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என வங்கிக் கணக்கு பாஸ் புத்தகத்தில் வரவு வைத்துள்ளார்.
அப்போது, சுமார் 17 லட்சத்து 96 ஆயிரத்து 101 ரூபாய் கணக்கில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால், அவரது மகிழ்ச்சி ரொம்ப நாள் நீடிக்கவில்லை.
அடுத்த நாள், அந்த 17 லட்சம் ரூபாய் பணமும் 3 தவணையாகத் திரும்ப எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விஜயலட்சுமியின் சேமிப்புப் பணமும் சேர்த்து எடுத்துள்ளனர். இதனால், அவரது வங்கிக் கணக்கு பூஜ்ஜியம் ஆகியுள்ளது.
இது குறித்து மூதாட்டி வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்தார். அப்போது, வங்கிக் கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டபோது, தவறுதலாக பிரிண்ட் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார் ஓட்டுநர் ஒருவருக்கு 9 ஆயிரம் கோடி வைப்புத்தொகை செய்யப்பட்டு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.