திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற திருமலை திருப்பதி திருக்கோவிலுக்கு, ஆந்திரா மட்டுமின்றி தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம் மற்றும் சீனிவாசகத்தில் இலவச சர்வதரிசன டோக்கன்களை நேரடியாக வழங்கி வருகிறது. தினசரி, 18,000 டோக்கன்கள் வரை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புரட்டாசி மாதம் என்பதால், திருமலை திருப்பதி திருக்கோயிக்கு சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, திருப்பதியில் தினமும் நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படும் சர்வ தரிசன டோக்கன்களை வழங்குவதை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
எனவே, திருப்பதியில் இன்று மற்றும் வருகிற 7,8,14,15 ஆகிய தேதிகளில் இந்த டோக்கன்கள் வழங்கப்படாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.