புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 25,000 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைமையிலான மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி, சாலை விபத்துகளைத் தடுக்கவேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வு செய்து வருகிறது.
புதுச்சேரியில் இந்தக்குழு ஆய்வு செய்தது. அப்போது, தலைக்கவசம் அணியாமல், வாகனத்தில் செல்வதால்தான் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தது.
மேலும், கடலூர் டூ விழுப்புரம் சாலையில் அதிகமாக வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அந்த குழு தெரிவித்தது.
இதனையடுத்து, புதுச்சேரியில் ஜனவரி முதல் கடந்த மாதம் 22-ம் தேதி வரை தலைக்கவசம் அணியாத 45,000 பேர் உள்பட 53,500 பேருக்கு அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 25,000 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட நபர், வாகனம் ஓட்டி மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.