ஒரு மனிதன் எவ்வளவுதான் பணம், பொருள், பதவி சம்பாதித்தாலும், அவை அவனுடன் கடைசி வரை வருவதில்லை. ஆனால், கல்வி மட்டுமே கடைசி வரை வருகிறது. அப்படிப்பட்ட கல்விக்கு அதிபதி சரஸ்வதி தேவி.
சரஸ்வதிக்கு ஒரு சில கோவில்களில் விக்கிரகங்களும், தனி சன்னதியும் இருக்கும். ஆனால், தமிழகத்தில் ஒரேயொரு இடத்தில்தான் தனியாகத் திருக்கோவில் உள்ளது. அது, நாகை மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ளது.
கருவறையில் வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில், வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி அருள் பாலிக்கிறாள் அன்னை சரஸ்வதி.
பிரம்மனின் மனைவியான சரஸ்வதியின் கையில் உள்ள வீணையின் பெயர் கச்சபி. இது சிவபெருமானால் வழங்கப்பட்டது. ஆயக்கலைகள் 64 -க்கும் தலைவி சாட்தாத் சரஸ்வதியே.
கலைமகள், சகலகலாவல்லி, காயத்ரி, சாவித்திரி, கலை வாணி, வித்யா தாரணி என 40 -க்கும் மேற்பட்ட பெயர்களில் போற்றப்படும், சரஸ்வதியை,
விஜயதசமி அன்று இந்த திருக்கோவிலுக்குச் சென்று, புத்தகம், பேனா, பென்சில் வைத்து பூஜை செய்து வணங்கினால், சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும்.